டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர்
டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் அவர்கள் இந்திய நாட்டில், தமிழகத்திலுள்ள சேலம் மாவட்டம் தாண்டவராயபுரம் எனும் ஒரு சிறிய கிராமத்தில், 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ல் ராமசாமி உடையார் - வள்ளியம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.
1969-ல், டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் அவர்கள் நம்பிக்கையே மூலதனமாய், கொண்டும் உழைப்பையே உறுதுணையாய், விடாமுயற்சியையே வெற்றி படிக்கட்டுகளாய்க் கொண்டு “நைட்டிங்கேல் மெட்ரிகுலேஷன்” என்ற பள்ளியைத் தொடங்கினார். 1984-ஆம் ஆண்டு, அவர் ஒரு உயர் தொழில்நுட்ப (Polytechnic) கல்லூரியைத் தொடங்கினார்.
அது படிப்படியாக வளர்ச்சியுற்று இன்று 20 கல்வி நிறுவனங்களாகத் தழைத்தோங்கியுள்ளது. பொறியியல், தொழில்நுட்பவியல், கட்டிடக்கலை, மேலாண்மை, மருத்துவம், இயற்கை அறிவியல், வணிகம், கலை அறிவியல், அறிவியல் மற்றும் மானுடவியல், திரைப்படக் கல்லூரி எனப் புலங்களின் கீழ்ப் பல்துறைப் படிப்புகளை இவரின் எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் வழங்கிவருகிறது. 40,000 மேற்பட்ட மாணவர்கள் எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் கீழ்ப் பயின்று வருகின்றனர். மேலும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மட்டும் 22,000 மாணவர்கள் பயிலுகிறார்கள்.
சமீபத்தில், இந்தியாவின் மிகச் சிறந்த தனியார் பல்கலைக்கழகம் என மதிப்பிடப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், பிரிட்டனிலுள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ், வார்விக் மற்றும் லான்காஸ்டர் பல்கலைக்கழகங்கள், பிரான்ஸ்ஸிலுள்ள சிறப்புமிக்க லில்லே கத்தோலிக்க பல்கலைக்கழகம், ஜெர்மனியிலுள்ள திறம்மிகு தொழில்நுட்ப பல்லைக்கழகம், ஸ்வீடனிலுள்ள உமியா பல்கலைக்கழகம், ஜப்பானின் கியுஷீ தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் டோக்கியோ பல்கலைக்கழகம், அமெரிக்காவின் புகழ்மிக்க எம்.ஐ.டி. கார்னிச் மெலன், கலிபோர்னியா, விஸ்கான்சின், சன்னி பஃபோலா பல்கலைக்கழகங்கள் மற்றும் வடகிழக்கு அமெரிக்க பல்கலைக்கழங்கள், சீனாவின் ஜிலின் மற்றும் வடகிழக்கு பல்கலைக்கழகங்கள் போன்ற புகழ்மிக்க பல சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. இவருடைய கல்வி சேவைக்காக, குறிப்பாக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளின் வளர்ச்சிக்கு இவராற்றிய பணியைப் பாராட்டி, இங்கிலாந்திலுள்ள பிரம்மின்ஹம் சிட்டி பல்கலைக்கழகம், பிப்ரவரி 2010-ஆம் ஆண்டு டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர்க்கு அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் (Hon.Causa) வழங்கி சிறப்பித்துள்ளது.